Published Date: February 28, 2025
CATEGORY: CONSTITUENCY

நாட்டின் எதிர்காலம் சிறக்க கர்ப்பிணிகளின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டியது அவசியம் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
சமூக நலன்,மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி திட்டம் சார்பில், மதுரை மத்திய சட்டப்பேரவை தொகுதிகளுக்குட்பட்ட எல்லிஸ் நகரில் உள்ள அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியதாவது:
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள், வளரிளம் பெண்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மனிதவளமே நாட்டின் மிகப்பெரிய சொத்து. அந்த வகையில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது வளமான எதிர்காலத்துக்கு மிகவும் அவசியமானதாகும். மகப்பேறு மரணம், குழந்தைகள் எடை குறைவு உள்ளிட்ட எதிர்மறை பிரச்சனைகளை குறைக்க தமிழக அரசு முதல் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கர்ப்பிணிகள் மாநிலத்தில் எதிர்காலத்தை தீர்மானிக்கும் நிலையில் உள்ளவர்கள் என்பதை உணர்ந்து, தேவையான ஊட்டச்சத்துக்களை சரிவர எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இதை அடுத்து கர்ப்பிணிகளுக்கு தமிழக அரசு சார்பில் சீர்வரிசை தொகுப்புகளை வழங்கி வாழ்த்தினார் .
மாவட்ட ஆட்சியர் மா.செள. சங்கீதா, மாநகராட்சி மேயர் வ. இந்திராணி, மண்டல தலைவர் பாண்டிச் செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்ட அலுவலர் ஷீலா சுந்தரி, துணை ஆட்சியர் (பயிற்சி) எம். அனிதா, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ். உஷாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Media: Dinamani